மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-16-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை மற்றும் செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த காவிரிநதி நீர் மீட்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்று தெரிவித்தார்.
நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை தோப்பூர் பகுதியில் அமையவிருக்கிறது என்ற நல்ல தகவலை, நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




